திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு நியூ இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் வாணியம்பாடியில் இரு சக்கர பழுதுபார்க்கும் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று பழனியின் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவரை பார்க்க குடும்பத்துடன் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவும் அங்கேயே தங்கியுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை பழனிக்கு அவரது உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டின் கதவு திறந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பழனி, உடனடியாக மேல்பட்டியில் இருந்து இந்திராநகர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிய நிலையிலும், அறையில் இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 லட்சம் மதிப்பிலான 20 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கொள்ளைச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்பு பகுதியில், இந்த கொள்ளைச்சம்பவம் நடந்தேறிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.