சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக கடந்த 10ஆம் தேதி இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகளில் சந்தேகப்படும் படியாக இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பல்வேறு விமானங்களில் வந்த பயணிகளை நிறுத்தி தனித்தனியாக சோதனை நடத்தியதில் 8 பெண்கள் உட்பட 25 பேர் தங்கம் கடத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தங்கக் கட்டிகள், தங்க பசை மற்றும் தங்க செயின்கள் என கிட்டதட்ட 20 கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கத்தைக் கடத்தி வந்தது சோதனையில் தெரியவந்தது. இவர்கள் 25 பேரும் 3 வெவ்வேறு விமானங்களில் பயணம் செய்தவர்கள். தமிழ்நாடு, ஆந்திரா என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அவங்கள் 25 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சென்னையில் உள்ள முக்கிய கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலர், இவர்கள் எல்லாரையும் சிங்கப்பூருக்கு கடத்தல் குருவிகளாக அனுப்பி வைத்துள்ளனர். ஒரே விமானத்தில் வந்தால் கடத்தல் தங்கம் மொத்தமாக அதிகாரிகளிடம் சிக்கிவிடுமென்று, 3 விமானங்களில் பிரிந்து பயணம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இருவரிடம் மட்டும்தான் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் இருந்துள்ளது. மீதமுள்ளவர்கள் ஒரு கிலோவுக்கும் குறைவான தங்கத்தையே கடத்தி வந்துள்ளனர். பிடிபட்ட குருவிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? கடத்தல் தங்கம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? உள்ளிட்டவை தொடர்பாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.