எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் 20 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள புகாரில், ஜெ.தீபாவை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகியான ஜானகிராமன் அளித்த புகாரின் பேரில், தீபாவின் உறவினர் ராஜா என்பவரிடம் தொலைபேசி வாயிலாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. விசாரணைக்காக, ஜெ.தீபாவை நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தும்படியும் அவரிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, ’எனது பேரவையை முறைப்படி பதிவு செய்திருக்கிறோம். அரசியலில் இருந்து என்னை வெளியேற்ற சதி நடக்கிறது. கடிதங்கள், தொலைபேசி மற்றும் முகம் தெரியாத ஆட்கள் மூலம் எனக்கு தொடர்ந்து தொல்லை தரப்படுகிறது’ என அவர் கூறினார்.