சென்னையில் தனியார் தொழிற்சாலையில் தேங்கி இருந்த மழைநீரை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சென்னை வியாசர்பாடி கிளாஸ் பேக்டரியில் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் செயின் லிங்க் இண்டஸ்ரீஸ் என்ற நிறுவனமும் பல வருடங்களாக இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதேபோல் இந்த நிறுவனத்தின் உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்து இருந்தது.
அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (48) , மோகன் (68) ஆகிய 2 பேரும் இங்கு பணிக்கு வந்துள்ளனர். பணிக்கு வந்ததும் தேங்கியிருந்த மழைநீரை அகற்றுவதற்காக மின் மோட்டரை போடும்போது, திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சில மணிநேரம் கழித்து அங்கிருந்த சில நபர்கள் இவர்கள் 2 பேரும் இறந்து கிடந்ததை பார்த்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.