எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் குழாய் உடைந்து 2 டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியுள்ளது.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த 2017ஆம் ஜனவரி 28ஆம் தேதி பி.டபிள்யு மேபிள் என்ற கப்பலும், டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால், பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டது. விபத்து குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதற்குக் காரணம் மனிதத் தவறுகளே என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. விபத்திற்கு முழுக்காரணம் இரு கப்பல்களையும் இயக்கியவர்களின் கவனக்குறைவுதான் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த கச்சா எண்ணெய் கசிவின் தாக்கம் இன்றும் கூட எண்ணூர், திருவொற்றியூர் மற்றும் காசிமேடு பகுதி கடலில் நிலவி வருகிறது.
இந்நிலையில் எண்ணூர் கமராஜர் துறைமுகத்தில் கோரல் ஸ்டோர்ஸ் என்ற கப்பலில் இருந்து கச்சா எண்ணெய்களை இறக்குமதி செய்யும் பணி இன்று அதிகாலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. காலை 4 மணியளவில் கச்சா எண்ணெய் செல்லும் குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் 2 டன் கச்சா எண்ணெய் கொட்டியது. இதைக்கண்ட கடலோரக் காவல்த்துறை உடனே கச்சா எண்ணெய் வெளியேற்றத்தை நிறுத்தினர். இந்த தகவல் பரவியது அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் 2 டன் கச்சா எண்ணெய் கசிவு என்பது, பெரியளவு கசிவு இல்லை என்று கடலோரக் காவல்படையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கச்சா எண்ணெய்யையும் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், குழாயில் ஏற்பட்ட உடைப்பே இதற்கு காரணம் என்றும் கடலோரக் காவல்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.