விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோயில் தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கு வந்த இரண்டு பெண் காவலர்கள் தேர் சக்கரத்தில் சிக்கியதில் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மாத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7ஆம் நாளான இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் கலந்துகொள்ள ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான காவலர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களில் இரண்டு பெண் காவலர்கள் எதிர்பாராதவிதமாக தேர் சக்கரத்தில் சிக்கினர்.
இதனையடுத்து அங்கிருந்த பக்தர்கள் உடனடியாக அவர்களை மீட்டனர். தேர் சக்கரத்தில் சிக்கிய இரண்டு பெண் காவலர்களில், ஒருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.