இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 72 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 8-ஆம் தேதி (விமானப்படை தொடங்கப்பட்ட தினம்) விமானப்படை தினமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு விமானப்படை தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை விமானப்படை மேற்கொண்டது.
அதற்காக சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட விமானப்படை சாகச நிகழ்ச்சி அரங்கேற்ற ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியில் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களான ரபேல், தேஜாஸ் உள்ளிட்ட போர் விமானங்களும், அதுமட்டுமல்லாமல் 70-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலமாக பொதுமக்கள் முன்னிலையில் விமானப்படையின் திறனை வெளிக்காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி அக்டோபர் 6-ம் தேதியான இன்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 முதல் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக கண்டுகளித்ததாகவும், அதில் 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையிலிருந்து கண்டுகளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 1 மணிவரை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண கூட்ட நெரிசலிலும், வெயிலிலும் காத்திருந்து பார்த்த மக்களில் சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டது. மயக்கம் ஏற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் காமராஜர் சாலையில் மயக்கம் ஏற்பட்ட ஜான் (56) என்பவரும் ஒருவர். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56), சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் மட்டுமன்றி உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இவர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அதிகப்படியான கொண்டாட்டத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்த ஒரு நிகழ்வில் இரு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.