மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், ஜெனரேட்டர் பழுது காரணமாக செயற்கை சுவாசம் தடைப்பட்டு மூன்று நோயாளிகள் இறந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், அங்கு இரண்டு புதிய ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
மதுரையில் சில தினங்களுக்கு முன் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், அரசு மருத்துவமனை உள்பட மாநகரின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் செயற்கை சுவாசம் தடைப்பட்டு மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி ஆட்டோமேடிக் ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டு இருந்ததாகவும், கனமழையில் நனைந்து ஜெனரேட்டர்கள் வேலை செய்யாததே, இந்நிலைக்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வனிதா அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் இரண்டு புதிய ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேனுவல் முறையிலான இந்த ஜெனரேட்டர்கள் அருகில், எப்போதும் பணியில் இருக்குமாறு எலெக்ட்ரீஷியன்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டு உள்ளது.