கோவை மாவட்டம் அர்த்தனாரிபாளையம் கிராமம் அருகே சுற்றிவரும் காட்டு யானை ‘அரிசி ராஜா’வை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைத்துள்ளது அர்தனாரிபாளையம் கிராமம். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே காட்டுயானை அட்டகாசம் உள்ளதாகவும், இந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதோடு விவசாயிகளையும் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்தனாரிபாளையம் பகுதி விவசாயிகள் ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அர்தனாரிபாளையம் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் புகுந்த காட்டுயானை பயிட்டுள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தியதோடு விரட்ட சென்ற ராதாகிருஷ்ணனனையும் அடித்துக் கொன்றது. இதையடுத்து கடந்த இரு தினங்களாக யானையை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த காட்டு யானை தற்போது அர்தனாரிபாளையம் பகுதியில் உள்ள குண்டுருட்டி பள்ளம் வனப்பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதை அறிந்த வனத்துறையினர் கலீம் மற்றும் பாரி ஆகிய இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் முகாம் அமைத்து யானையை பிடிக்க முயன்று வருகின்றனர். இந்த யானை கடந்த மே மாதம் மாகாளி மற்றும் ரஞ்சனா ஆகிய இருவரை கொன்றது குறிப்பிடத்தக்கது.