இலுப்பூரில் மின்கம்பி அறுந்து விழுந்து சண்டையிட்டுக்கொண்டிருந்த இரண்டு பாம்புகள் மற்றும் இரண்டு நாய்கள் பலியாகின. மீட்கச்சென்ற தீயணைப்புத் துறையினர் மின்கம்பியில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் பின்புறம் இரண்டு பாம்புகள் இரண்டு நாய்கள் சண்டையிடுவதாகவும், இதனால் நாய்கள் தொடர்ந்து கத்திக்கொண்டு இருப்பதாகவும் அந்த நிறுவனத்தில் இருந்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர், அந்த தனியார் நிறுவன கட்டடத்தின் பின்புறம் சென்று பார்த்தபோது, இரண்டு நாய்கள் மற்றும் இரண்டு பாம்புகள் இறந்து கிடந்துள்ளது.
இதனால் நாய்கள் மற்றும் பாம்புகள் சண்டையிட்டு இறந்திருக்கலாம் என நினைத்து அருகில் சென்று பார்த்தபோதுதான் மின்கம்பி ஒன்று அறுந்து நாய் மற்றும் பாம்புகள் மீது விழுந்ததால் அவை இறந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு மின்கம்பி சரி செய்யப்பட்டது. மின் கம்பி அறுந்து கிடந்ததை கவனிக்காமல் அருகில் சென்றிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இதனால் தீயணைப்புத்துறையினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.