சென்னை அடையாற்றில் குளிக்கச்சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை அடையாற்றில் குளிக்கச்சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சென்னை அடையாற்றில் குளிக்கச்சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Published on

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அடையாற்றில் இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்தவாரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வழக்கத்தைவிட அடையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகர் பகுதிக்கு அருகில், அரசு பண்ணை என்ற பகுதியில் செல்லும் அடையாற்றில், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர்.

குளிக்கச்சென்ற இருவரும் மீன் பிடிப்பதற்காக ஆற்றின் ஆழமானப் பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் இரண்டு சிறுவர்களும் அடையாற்றில் மூழ்கியுள்ளனர். உடன் சென்ற சிறுவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று அடையாற்றில் மாயமான சிறுவர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சந்தோஷ் என்ற 10 வயது சிறுவனின் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் ஹரீஷ் என்ற 14 வயது சிறுவனின் உடலை தொடர்ந்து தேடும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு சிறுவர்கள் அடையாற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க, ஆபத்தான இந்த அடையாற்றுப் பகுதியில் பள்ளி மாணவர்கள் செல்லாமல் இருப்பதற்கு தடுப்புச்சுவர் அல்லது இரும்புக் கதவுகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com