மாயாகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்களும் சமமாக தலா 664 வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்வானவர்களை தவிர, 73 ஆயிரத்து 405 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி இதுவரை நடைபெற்று வருகிறது.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் மாயாகுளம் பஞ்சாயத்து தலைவருக்கு
பஞ்சவள்ளி மற்றும் சரஸ்வதி போட்டியிட்டனர். இதில், இரண்டு பேரும் சமமாக தலா 664 வாக்குகள் பெற்றனர். இதனால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதிலும் சமமாக அதே 664 வாக்குகள் பெற்றதால்
குலுக்கல் முறையில் ஊராட்சி தலைவரை தேர்வு செய்தனர். இதில் சரஸ்வதி வெற்றி பெற்று பஞ்சவள்ளி தோல்வியடைந்தார்.