”எனக்கு 50கி கஞ்சா வேணும்”.. ஜிபேவில் வந்த ஆர்டர்.. டெலிவரி செய்தவருக்கு நிகழ்ந்த ட்விஸ்ட்

”எனக்கு 50கி கஞ்சா வேணும்”.. ஜிபேவில் வந்த ஆர்டர்.. டெலிவரி செய்தவருக்கு நிகழ்ந்த ட்விஸ்ட்
”எனக்கு 50கி கஞ்சா வேணும்”.. ஜிபேவில் வந்த ஆர்டர்.. டெலிவரி செய்தவருக்கு நிகழ்ந்த ட்விஸ்ட்
Published on

சென்னையில் துரித உணவகத்தினுள் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைதுசெய்து அவர்களிடம் இருந்து 10.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை பகுதிகளில் கஞ்சா விற்பனையில் இருவர் ஈடுபடுவதாக ராயப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதாவது, செல்போன் தொடர்புமூலம் ஆர்டர் பெற்று இருசக்கர வாகனத்தில் வந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் அதனடிப்படையில் போலீசார் ராயப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

மேலும், போலீசாரே வாடிக்கையாளர்போல் நடித்து கஞ்சா விற்பனையாளரின் தொடர்பு எண்ணில் அழைத்து 2500 ரூபாய் கூகுல் பே மூலம் செலுத்தி 50 கிராம் கஞ்சாவை ஆர்டர் செய்தனர். அதனடிப்படையில் கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டுத் திடலில் வைத்து கஞ்சா டெலிவரி செய்யவந்த நபரை கையும் களவுமாக கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 2.250 கிலோ கஞ்சா மற்றும் 40 ஆயிரம் பணம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர், அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னா (எ) முன்வர் மியான் (45) என்பதும், தனது கூட்டாளியான அப்துல் கஃபார் (45) என்பவருடன் சேர்ந்து திரு.வி.க சாலையில் துரித உணவகம் நடத்தி வருவதும் தெரியவந்தது. பின்னர், அப்துல் கஃபாரை கைதுசெய்த போலீசார் துரித உணவகத்தில் சோதனை நடத்தி அங்கிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அப்துல் கஃபாரிடம் நடத்திய விசாரணையில் அசாமில் இருந்து கஞ்சா கடத்தி வரும் நபரிடம் இருந்து எழும்பூரில் வைத்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி துரித உணவகத்தில் பதுக்கி வைத்து செல்போன் மூலம் ஆர்டர் பெற்று பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அசாமில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரும் நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com