பெண் பிள்ளை உள்ள வீட்டின் முன்பு செல்போன் பேசக்கூடாது எனக்கூறிய முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரத்தினம். வயது 65. அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற பெயர் கொண்ட இரண்டு இளைஞர்கள் இவரது வீட்டருகே நின்று கொண்டு அடிக்கடி செல்போன் பேசி வந்துள்ளனர். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த ரத்தினம் ஏன் அடிக்கடி இங்கே வந்து செல்போன் பேசுகிறீர்கள் என தட்டிக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் கோபமடைந்த இளைஞர்கள் ரத்தினத்தை அடித்து கீழே தள்ளியுள்ளனர். இதில் ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ரத்தினத்தின் மகன் ராமு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 2 இளைஞர்களையும் தேடி வந்தனர். இந்நிலையில் கொலை செய்த இருவரையும் சுவாமிமலை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் முதியவர் ரத்தினத்திற்கு கல்லூரி பயிலும் மகள் உள்ளதும் பெண்கள் உள்ள வீட்டின் முன்பு வந்து நின்று கொண்டு அடிக்கடி செல்போன் பேசக் கூடாது என ரத்தினம் கண்டித்ததும் தெரியவந்துள்ளது என போலீசார் தரப்பு தெரிவிக்கின்றன.