விதிகளை முறையாகப் பின்பற்றாததால், சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு இரண்டரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த 2007 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களின்போது, மத்திய அரசிடம் இருந்து பல்கலைக்கழக நிர்வாகம் 70 கோடி ரூபாயை மானியமாக பெற்றது. இந்த நிதியில், நானோ அறிவியல் மையம் கட்டுவதற்கு 14 கோடியே 48 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அறிவியல் மையம் கட்ட உரிய அனுமதியை பல்கலைக்கழகம் பெறவில்லை. இந்த மையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடம் பாரம்பரியப் பகுதியில் வருவதால், ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட காலதாமதத்தால், அறிவியல் மையம் கட்ட நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர், தற்போது அதற்கு 19 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறி, அதைப் பெற்றுள்ளார். உரிய விதிமுறைகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் பின்பற்றியிருந்தால், 2 கோடியே 87 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தி இருக்கலாம் என மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.