தமிழகத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தற்காலிகமான பட்டியல்தான், தொடர்ச்சியான ஆய்வுகள் நடந்துவருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போதுவரை சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பஞ்சமி நிலத்தின் உண்மையான அளவு இதனைவிடவும் அதிகமாக உள்ளது என்ற கருத்து இருப்பதால், இது பற்றிய கணக்கெடுப்புகள் தொடர்ந்து நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடையாளம் காணப்பட்ட பஞ்சமி நிலங்களில், கிட்டத்தட்ட 30% க்கும் அதிகமான நிலங்கள் பட்டியல் சாதியினரைத் தவிர வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்திலும் அதிகாரிகள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் நிர்வாகம் பஞ்சமி நிலத்தை ஒதுக்கும் திட்டத்தை வகுத்தபோது, மெட்ராஸ் பிரசிடென்சியில் நிலமற்ற பட்டியலின மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் நிலத்தை வழங்கியது, இதில் ஆந்திரா மற்றும் கேரளா, கர்நாடகா மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளும் அடங்கும். மாநிலத்தில் தற்போதைய பஞ்சமி நிலத்தின் சரியான எண்ணிக்கை ஒரு குழப்பமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஜூலை 1991 இல் வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவைத் தொடர்ந்து, அதிகாரிகள் 85,000 ஏக்கர் பஞ்சமி நிலத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது, அதன் பின்னர் இந்த முயற்சி கைவிடப்பட்டது.
2006-ஆம் ஆண்டில், நில நிர்வாக ஆணையர் (சி.எல்.ஏ) ஒரு தகவல் அறியும் உரிமை சட்ட மனுதாரரிடம், சுமார் 1.26 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் இருப்பதாகவும், அதில் சுமார் 10,620 ஏக்கர் பட்டியல் இனத்தவர் அல்லாதவர்களிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பட்டியல் இனத்தவர் அல்லாதவர்கள் வைத்திருக்கும் பஞ்சமி நிலத்தை மீட்டெடுப்பது நிலத்தை அடையாளம் காண்பதை விட பெரிய சவாலாக இருக்கும் என்பதை ஒப்புக் கொண்ட அதிகாரிகள், அதற்காக ஒரு சட்டத்தை உருவாக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்தனர்.