செய்தியாளர்: பிரசன்னா
மதுரை மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 194 இள வயது பிரசவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் மதுரை மாநகராட்சியில் மட்டும் 49க்கும் அதிகமாக இளம் வயது பிரசவங்கள் பதிவாகி உள்ளன.
பெற்றோரே நடத்தி வைக்கும் திருமணங்கள் ஒரு பக்கம் என்றால், காதல் என்ற பெயரில் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள், சிறார் வதை போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் என்று, சிறுமிகள் பல விதங்களிலும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்னையில், பெற்றோர்கள், பள்ளிகள், மருத்துவத் துறை, சமூக நலத்துறை என அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது...
குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும் முற்றிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, 18 வயது நிரம்பாத சிறு வயது பெண்கள் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் உடனடியாக சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என சுற்றறிக்கை அரசு அனுப்பி இருந்தது. ஆனால், தற்பொழுது வரை எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு மனநிலை ஆலோசனை வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அரசின் சுற்றறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பொது வழக்கு தொடுத்திருந்தேன்.
அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் பெரும்பாலான நேரங்கள் பள்ளியில் தான் செலவிடுகிறார்கள் என்பதால் அவர்களுக்கு கட்டாயம் சமூகம் சார்ந்தும் நல்லது கெட்டதை எடுத்துக் கூற மனநல ஆலோசனை வழங்குவது கட்டாயம் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. இருப்பினும் தற்பொழுது வரை மாணவர்களுக்கு எந்தவித மனநிலை ஆலோசனையும் வழங்கப்படுவதில்லை என்பது வேதனை அளிக்கிறது என்று சமூக செயல்பாட்டாளர் வெரோனிகா ஆனந்தராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனை தொடர்பு கொண்டு கேட்டபோது, 18 வயதுக்கு கீழ் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பட்சத்தில் அனைத்து புகார்களுக்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழந்தை பிரசவம் நடைபெறுவதை தொடர்ந்து தகவல் கிடைத்த உடனே வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.