தமிழகத்தில் திருவள்ளூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்தணி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு தனிவார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 12 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு சிறப்பு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் ரத்த பரிசோதனை மையம் இயங்கவில்லை என காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.
இதேபோல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு தனிப்பிரிவு தொடங்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் டீன் வனிதா தெரிவித்துள்ளார். மேலும், வைரஸ் காய்ச்சலால் 47 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.