ஜக்கையனை ஒரு மாதிரியாகவும், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களை வேறு மாதிரியாகவும் நடத்தியதாக கூறுவது தவறு என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதத்தை முன் வைத்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணனின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வர இந்நிலையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதத்தை முன் வைத்தார்.
ரோஹத்கி தனது வாதத்தில் “ஜக்கையனை ஒரு மாதிரியாகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களை வேறு மாதிரியாகவும் நடத்தியதாக கூறுவது தவறு. சபாநாயகர் அழைத்தபோது, ஜக்கையன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததுடன், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் மாற்றியதால்தான் நடவடிக்கை கைவிடப்பட்டது. ஆனால் மற்றவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்பதை அறிந்துதான் கட்சித் தாவல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன். என்னை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது. கட்சியில் இருந்துக் கொண்டே முதல்வருக்கு எதிராக செயல்படுவதால் கட்சி தாவலில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தேன்” என வாதிட்டார்
அரசு கொறடாவின் வாதம் இன்று நிறைவடைந்ததையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. நாளை மறுநாள் மீண்டும் விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.