கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் மட்டுமே அது தகுதி நீக்கத்துக்கு வழி வகுக்கும் என 18 எம்எல்ஏக்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், எம்எல்ஏக்கள் தரப்பிலும், சபாநாயகர், முதல்வர், அரசு தலைமை கொறடா தரப்பிலும் நடைபெற்ற வாதங்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிறைவடைந்தன. இந்நிலையில் 10ஆவது நாளான இன்று, எம்எல்ஏக்கள் 18 பேர் தரப்பில் பதில் வாதங்களை மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி முன்வைத்தார். அதில், கட்சிக்கு எதிராகவும், தலைமைக்கு எதிராகவும் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்றும், ஆனால் கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் மட்டுமே அது தகுதி நீக்கத்துக்கு வழி வகுக்கும் என்றார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி சபாநாயகரின் முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என வாதிட்ட வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சபாநாயகரின் உத்தரவுக்கு எந்தச் சட்ட பாதுகாப்பும் இல்லை எனத் தெரிவித்தார். அரசியல் சாசனம் பத்தாவது அட்டவணைப்படி தகுதி நீக்கம் செய்ததாக கூறும் சபாநாயகர், நடுநிலையுடன் செயல்படவில்லை என்பதால், தீர்ப்பாயத்தின் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்றும் வாதிட்டார். நீதிமன்ற நேரம் முடிவடைந்ததால், வாதங்களை ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடர அனுமதித்து வழக்கை நீதிபதி எம்.சத்யநாராயணன் ஒத்திவைத்தார். அன்றைய தினம், அரசு தரப்பிலும், சபாநாயகர் தரப்பிலும் வாதங்கள் முன் வைக்க முப்பது நிமிடங்கள் தேவை என்ற கோரிக்கையையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.