18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, ஜூன் 14ஆம் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், ஜூலை 23ஆம் தேதி முதல் மூன்றாவது நீதிபதி எம்.சத்யநாராயணன் விசாரித்தார்.
மூன்றாவது நீதிபதி முன்பு தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், முதல்வர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதங்கள் முன்வைத்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.