திருச்செந்தூர் அருகே புன்னக்காயலில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அச்சகம் மற்றும் பழங்கால நாணயங்களை தமிழக தொல்லியல் துறையினரின் ஆய்வில் கண்டெடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என கிராம மக்கள் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கொற்கை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழக தொல்லியல் துறை ஆய்வாளர்களில் ஒருவரான ஆசைத்தம்பி புன்னக்காயல் கிராமத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மூன்று ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற முதற்கட்ட ஆய்வில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. மேலும் 1578 ஆம் ஆண்டு அன்றிக் அடிகளார் என்பவரால் இன்றைய கேரள மாநிலமான கொல்லத்தில் தம்பிரான் வணக்கம் என்ற முதல் தமிழ் நூல் அச்சிடப்பட்டது. அதே காலகட்டத்தைச் சேர்ந்த அச்சகத்தின் மிச்சங்கள் புன்னைகாயலில் கிடைத்துள்ளது.
மேலும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 16 செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து கிடைக்கப்பெற்ற நாணயங்கள் மற்றும் கண்டறியப்பட்ட பொருட்களை தொழில்துறை ஆய்வாளர் ஆவணப்படுத்தி உள்ளார். முதற்கட்ட ஆய்வில் முதல் நாளிலேயே 16ஆம் நூற்றாண்டு சான்றுகள் கிடைத்துள்ளது தொல்லியல் ஆய்வாளர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல், சீனாவில் இருந்து இறக்குமதியான பீங்கான் பொருட்களின் மிச்சங்கள், புகை பிடிக்கும் சுஞ்ஞான் போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து இந்த ஆய்வை மீண்டும் பெரிய அளவில் செய்ய தொடங்கினால் இன்னும் பல அரிய வகை பொருட்கள் பழங்கால நாணயங்கள் போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என அப்பகுதியை மக்கள் தெரிவித்தனர்.