புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 16 சிலைகளை துப்பரவு பணியாளர்கள் பார்த்து அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை, துப்புரவு பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். அந்த பையில் விநாயகர், நரசிம்மர், அனுமர் உள்ளிட்ட சிலைகள் இருப்பதை கண்டுள்ளனர். இதையடுத்து சிலைகள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தமிழ்குமரன் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிலைகளை ஆய்வு செய்ததில், ஒரு ஐம்பொன்சிலை, காமாட்சியம்மன் விளக்கு உள்பட 16 சிலைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். பின்னர் அந்த சிலைகள் வருவாய்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் சிலையை கடத்தி வந்தவர்கள் யார், எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் சிலைகள் இருந்த பையில் மலையாள எழுத்துகள் அச்சிடப்பட்டிருப்பதால், கடத்தலில் ஈடுபட்டவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.