செய்தியாளர்: சாந்தகுமார்
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். சோதனை முடிவில் அந்த வாகனத்தில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து வாகன ஓட்டுனரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மது பாட்டில்களை அவர் பம்மலில் இருந்து கோவிலாஞ்சேரி பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு மதுபானக் கடைகள் விடுமுறை என்பதால் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டதா இவை, எந்த மதுபான கடைக்கு சொந்தமானது என்பது குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.