ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 150 பேரை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத் தோப்பு பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே காட்டாறு ஓடுகிறது. விடுமுறை தினம் என்பதால் நேற்று இங்கு பலர் பொழுதுபோக்குக்காக வந்திருந்தனர்.
அப்போது கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குடும்பத்துடன் ஆற்றின் முனை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக மேலே ஏறி கோயிலில் தஞ்சம் புகுந்தனர்.
ஆனால் மீன்கொத்தி பாறை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட மொத்தம் 150 க்கும் மேற்பட்டோர் மறு கரையில் சிக்கிக் கொண்டனர். ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஆற்றின் மறுகரையில் கயிறுகளை கட்டி சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.