வேளச்சேரி ஸ்கூட்டரில் இருந்த விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் - தேர்தல் அதிகாரி தகவல்

வேளச்சேரி ஸ்கூட்டரில் இருந்த விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் - தேர்தல் அதிகாரி தகவல்
வேளச்சேரி ஸ்கூட்டரில் இருந்த விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் - தேர்தல் அதிகாரி தகவல்
Published on

வேளச்சேரி தொகுதியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட தகவலில், 'வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரம் 50 நிமிடங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதில், 15 வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் இருந்தன. விதிமீறல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பது பற்றியும் தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி முடிந்த நிலையில், அன்றிரவு வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் தூக்கிச் சென்ற நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரித்தனர். அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது.

ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல என்றும், பழுதான 2 விவி பேட் இயந்திரங்களும், 2 மாற்று இயந்திரங்களும்தான் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது என்றும் தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிக்கையில் விளக்கமளித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அந்த மாநகராட்சி ஊழியர்களுக்குப் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், வி.வி. பேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இப்போது தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com