கல்குவாரியில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி

கல்குவாரியில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி
கல்குவாரியில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி
Published on

ராஜபாளையம் அருகே கல்குவாரி குடோனில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் கனிம வளத்துறை அனுமதியுடன் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரி குறித்து களஆய்வு செய்வதற்காக சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த டெம்போ வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். ஓட்டுனர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து வாகனத்தை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதில், தமிழக அரசால் நியாயவிலை கடைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி மூடைகள் இருந்துள்ளது.

இதையடுத்து ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில், அருகே உள்ள கல்குவாரியில் இருந்து அரிசி மூடைகளை எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். அவரது தகவலின் பேரில் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன், துணை வட்டாட்சியர் கோதண்டராமன் உள்ளிட்டோர் காவல் துறையினர் பாதுகாப்புடன் புத்தூர் மலைக்கு பின்புறம் இருந்த கல் குவாரியில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த குடோனில் ரேஷன் அரிசியை சாக்கு மாற்றி மூடைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைத்திருப்பது மேல் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து குடோனில் பதுக்கி வைத்திருந்த 250 மூடைகள் மற்றும் டெம்போ வாகனத்தில் கடத்தி சென்ற 35 மூடைகள் என 285 மூடைகளில் இருந்த 15 டன் ரேஷன் அரிசி மற்றும் டெம்போ வாகனத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் மற்றும் வாகனத்தை உணவு பொருள் கடத்தல் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்குவாரியில் நடத்திய ஆய்வில் முறையான அனுமதியின்றி சிலை செய்வதற்காக பெரிய அளவிலான கற்கள் இரவு நேரத்தில் வெட்டி எடுத்து செல்வதும் தெரியவந்தது. இதையடுதது அனுமதியின்றி பெரிய அளவிலான கற்களை எடுத்துச் சென்ற லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கல் குவாரியின் உரிமையாளர் குறித்தும், தப்பியோடிய ஓட்டுனர் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com