மாமல்லபுரத்தில் தனியார் பாதுகாவலரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலாத் தளத்தில், பார்க்கிங் தனியார் பாதுகாவலரை, காரில் வந்தவர்கள் தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் சில தினங்களுக்கு முன்னர் வேகமாக பரவியது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, முடிச்சூரை சேர்ந்த கீர்த்தனா, சண்முகப்பிரியா, பிரபுதாஸ் ஆகிய மூவரை நேற்று பிற்பகலில் கைது செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடையே பேசிய கைதானவர்கள், “தனியார் பாதுகாவலர்தான் எங்களை மதுபோதையில் தரக்குறைவாக பேசினார், அந்த காட்சியை யாரும் வெளியிடவில்லை. முழுமையான ஃபுட்டேஜை பார்க்கவும். ஏன் சோஷியல் மீடியாக்கள் இப்படி செயல்படுகின்றன என எங்களுக்கு புரியவில்லை” எனக்கூறினர்.
பின்னர் இதையே வாதமாகவும் நீதிபதியிடம் வைத்தனர். அவற்றை குறித்துக் கொண்ட நீதிபதி, கைதான மூவருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்தார். பிரபுதாஸை மாவட்ட சிறையில் அடைக்கவும், மற்ற இரு பெண்களை புழல் சிறையில் அடைக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.