விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட இருதரப்பு மோதலையடுத்து நெல்லையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 34 இடங்களில் விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. செங்கோட்டை விநாயகர் குழுவினர், மேலூர் வழியாக விநாயகர் ஊர்வலத்தை கொண்டு செல்லும் போது அங்குள்ள ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு கூடியிருந்தவர்களுக்கும் ஊர்வலத்தில் சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.
இதையடுத்து கடும் மோதல் வெடிக்க, இரு தரப்பினரும் கற்களை கொண்டு தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதல் சம்பவத்தின்போது கடைகள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அங்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.