தமிழகத்தில் 14 லட்சத்து 60 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கு Quality Certification Standards and Process Requirements என்ற தலைப்பில் ISO தரச் சான்றிதழ் பெறுவது தொடர்பான ஒரு நாள் பயிற்சி கூட்டுறவுச் சங்கங்களின் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., பேசியது, ’தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தியாளர்களிடம் பொருள்கள் பெற்று அதற்கு தரம் அளித்து பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக மங்களம், மருதம். அர்த்தனாரீஸ்வரர் போன்ற பெயர்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான பொருள்களை விற்பனை செய்து வருகின்றன.
இவை அனைத்துக்கும் ஒரே மாதிரியான பெயரிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தரமான பொருள்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு விற்பனை அதிகரிக்கும் போது தரமான பொருள்களை மக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தற்போது கூட்டுறவுச் சங்கங்களில் 140 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட Processing Unit உள்ள நிலையில் மேலும் உற்பத்தி மற்றும் தரம் பிரித்து வழங்குவதற்கு ஏதுவாக விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதனால் பொது மக்களுக்கு தங்குதடையின்றி பொருள்கள் விற்பனை செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
தமிழகத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியமான பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 14,60,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்படாமல் உள்ளது என்பதை கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி வங்கி கணக்கு தொடங்கப்படாத குடும்ப அட்டைதாரர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.