கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், சினிமாவிலிருந்து அவர் விலக முடிவு எடுத்திருப்பதாகவும் பேச்சுகள் எழுந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சமீபகாலமாக, நடிகர் விஜய்யும் பேசி வந்தார். இப்படியான சூழலில் பலரும் எதிர்பார்த்ததைப் போலவே புதியதாக அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார் விஜய். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு அவர் பெயர் வைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிய, விண்ணப்பித்தார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியதையடுத்து, புதுக்கோட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், ஓசூர், சிதம்பரம், பழனி, விருதாச்சலம், திருவள்ளூர், செஞ்சி, காரைக்குடி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
புதியதாக அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
13 ஆண்டுகளுக்கு முன்பே தனது அரசியல் வருகையை குறித்த கேள்விக்கு நச் என பதில் அளித்துள்ளார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்.
13 வருடங்களுக்கு முன்பாக ஆங்கில தனியார் செய்தி நிறுவனம் ஒன்று இவரை நேர்காணல் செய்தபோது, அரசியல் நுழைய வாய்ப்பு இருக்கிறதா? அப்படி இருந்தால் எந்த கட்சியில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நடிகர் விஜய், “இன்றைய சூழலை பொறுத்தவரை திரைத்துறையில் சாதிக்க வேண்டும், நல்ல நடிகனாக வர வேண்டும் என்பதும், நல்ல படங்கள் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது கவனமாக இருக்கிறது. அதை நான் செய்து கொண்டு இருக்கிறேன். திரைத்துறையில் இந்த அளவிற்கு எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அதற்கேற்ற காலம்தான் என்னை இவ்விடத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
எப்படி எனக்கு திரைத்துறையில் வெற்றிபெற காலம் அமைந்ததோ, அதே காலம் என்னை அரசியலில் வந்து சேர்க்கும். அதற்கான நேரம், சூழல், இடம் அனைத்தும் அமையும். அப்போது நான் நிச்சயம் வருவேன்.
ஆனால் அதற்கு இன்னும் காலம் உள்ளது. இது விளையாட்டு இல்லை. அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றால், அதற்கான அடித்தளத்தினை உறுப்படுத்த வேண்டும். அதற்கான வேலையை நான் செய்து கொண்டுதான் இருப்பேன். ஒரு ரசிகர் இயக்கமாக இருந்ததை , மக்கள் இயக்கமாக மாற்றி உறுப்படுத்தி கொண்டுதான் இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று மிக உறுதியாக இருக்கிறேன்.அதற்கான ஆர்வம் இருக்கிறது. ஆனால் நேரம் இது கிடையாது.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் வெளியிட்டிருக்கும் தனது முதல் அறிக்கையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் திருக்குறளைக் குறிப்பிட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் பல ஆண்டுகளாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருவதாகவும், இருப்பினும் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டுமே முடியாது என்பதால், அரசியல் அதிகாரம் தேவைப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். தற்போதைய அரசியலில் ஊழல் மலிந்த கலாச்சாரம் ஒருபுறம், பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம் என இருபுறமும் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்திருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கும் விஜய், தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னால் முடிந்தவரையில் முழுமையாக உதவ வேண்டும் என்பதே நீண்டகால விருப்பம் என்றும், எண்ணித் துணிக கருமம் என்னும் வள்ளுவன் வாக்கின்படியே தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் தமது தலைமையிலான அரசியல் கட்சி தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுமக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் தமது இலக்கு எனக் கூறியிருக்கும் விஜய், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை எனமுடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னை பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல, ஒரு புனிதமான பணி என்றும், அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து கொள்ள மனதளவில் பக்குவப்படுத்திக்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். அரசியல் தனக்கு பொழுதுபோக்கு அல்ல, ஆழமான வேட்கை எனக்கூறியிருக்கும் விஜய், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியிலில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
விஜயின் மக்கள் இயக்கம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தனது இயக்கத்துக்காக தனி கொடியை விஜய் அறிமுகப்படுத்தினார். அரசியல் கட்சிக்கான தொடக்கமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அவரது படங்களுக்கான நெருக்கடிகளால் சிறு சிறு பிரச்னைகளை அவர் எதிர்கொண்டார். 2011 ஆம் ஆண்டில்
காவலன் பட வெளியீட்டில் பிரச்னை, 2013 ல் டைம் டூ லீட் என்ற டேகில் வெளியான தலைவா படம், 2014 ல் கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டங்கள் 2015 ல் புலி திரைப்படம் வெளியானபோது வருமானவரித்துறை சோதனை, 2017 ல் மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா வசனங்களால் சர்ச்சை என பல விஜய் படங்களும், சர்ச்சைகளும் நீண்டன.
ஜல்லிக்கட்டு போராட்டம், மாணவி அனிதா தற்கொலை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்தது என பொதுப்பிரச்னைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் விஜய் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். கட்சி தொடங்குவதற்கு முன்பாக, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரடி அரசியலில் களமிறக்கினார், விஜய். இயக்கத்தின் கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றார்கள். இதனைத்தொடர்ந்து தனது இயக்கத்தை கட்சி கட்டமைப்பாக மாற்றும் நடவடிக்கைகள், ஆலோசனைக்குப்பிறகு தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியாக அறிவித்திருக்கிறார்.