புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ளது நொடியூர் கிராமம். அப்பகுதியில் குடிநீர் பிரச்னை நிலவுவதால் அக்கிராம மக்கள் ஊருக்கு ஓரமாக உள்ள குளத்திலிருந்து ஊற்று நீர் எடுத்துவந்து குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி இன்று காலை 7 மணி அளவில் அந்த குளத்தில் உள்ள ஊற்றில் குடிநீர் எடுத்து வரச் சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அந்த குளத்துப் பகுதிக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுமி இல்லாததால் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தேடியுள்ளனர்.அப்போது அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலில் காயங்களுடன் கிடந்துள்ளார்.
சிறுமியைக் கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்திகுமார் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த அவர், சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர்களின் அறிக்கை வெளியான பிறகு விசாரணை தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.