மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து சட்டப்பேரவை கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் அம்மாநில அரசு முனைப்பாக உள்ளது. மேகதாது அணையால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கும் என்பதால் அத்திட்டத்தை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ள 13 கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, பாரதிய ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், ரவிக்குமார், இடதுசாரி கட்சிகளின் சார்பில் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து சட்டப்பேரவை கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் திருமாவளவன் கூறும்போது, “தடையையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கட்டுமானப் பணியை கையில் எடுத்த கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
பாஜக சார்பில் பேசிய வி.பி.துரைசாமி, “காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக ஆதரவு அளிக்கும்” எனத் தெரிவித்தார்.
அதேபோல், கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, “அணை தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சிபிஎம் ஆதரவு தரும். மேகதாது விவகாரத்தில் முதல்வர் தலைமையில் குழுஅமைக்க வேண்டும்” என்றார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என முத்தரசன் தெரிவித்தார்.
இதுபோல் 13 கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 ஆண்டுகளாக தலைவர்கள் இல்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து ஆலோசனைக்கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு மேகதாது திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.