கன்னியாகுமரி மாவட்டம் பால்குளத்தில், ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இன்று, கொடிய விஷத்தன்மை கொண்ட 13 அடி நீளம் கொண்ட ராஜநாகம் பாம்பு புகுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அழகியபாண்டிபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறை குழுவினர் சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதியில் மூன்று மணி நேரம் போராடி பாம்பைப் பிடித்தனர். பிடிபட்ட ராஜநாகத்தின் தலையை அழுத்தி பிடித்தவாறு வனத்துறையினர் சாக்குப்பையில் அடைத்தனர்.
பின்னர், அந்த ராஜநாகம் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விடப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரண்கோணம் அருகே ரப்பர் கழக லேபர் காலனியில் கொடிய விஷத்தன்மை கொண்ட 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ராஜநாகங்கள் பிடிப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.