பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பயத்தால் திருமங்கலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் தீக்குளித்து உயிரிழந்தார். இறப்பு குறித்து அவனியாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை திருமங்கலம் அருகே புள்ளமுத்தூர் கிராமத்தில் உள்ள கிழக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த பழனிபாபு-உஷாராணி தம்பதியரின் மகன் 17 வயது சஞ்சய். இவர் திருமங்கலம் பி.கே.என் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவரும் மாணவன் அடிக்கடி அனைத்து பாடங்களிலும் தோல்வியைத் தழுவியதால் தாயார் உஷாராணி தனது அண்ணன் ராஜபாண்டி வசித்துவரும் அவனியாபுரம் பகுதியில் தங்கி படிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதனால் தாய்மாமன் ராஜபாண்டி என்பவரது வீட்டிலிருந்து தினமும் திருமங்கலத்தில் உள்ள பள்ளிக்கு சென்றுவந்த மாணவன், பொதுதேர்வு குறித்து பயத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பொதுத் தேர்வு தொடங்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேர்வு பயம் காரணமாகவும் தான் பொதுத்தேர்வில் தோல்வி அடைவேன் என்று எண்ணியதாலும் அதிகாலை 5 மணியளவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது மாமா ராஜபாண்டி இருசக்கர வாகனத்திற்காக ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார் சஞ்சய்.
பள்ளி மாணவனின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய்மாமன் ராஜபாண்டி ஓடிவந்து பார்த்தபோது தீயில் எரிந்தகொண்டிருந்த சிறுவனை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் மாமாவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தீயை அணைத்து தீக்காயம் அடைந்த சிறுவன் மற்றும் அவரது மாமா ராஜபாண்டி இருவரையும் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
பிளஸ் டூ பொது தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவேன் என எண்ணி சிறுவன் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.