மாடிப்படியில் தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டபோதும் ஆர்வமுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வினை தேனியைச் சேர்ந்த மாணவி எழுதி வருகிறார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த கடமலைகுண்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் சுவேதா. அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-டூ படித்து வரும் இவர், கடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர். நடப்பு ஆண்டில் பிளஸ்-2 படித்து வரும் இவர், நன்கு படித்து பொதுத்தேர்வுக்கு தயாரானார். அதன்படி, தமிழ்த் தேர்வை சிறப்பாக எழுதிய மகிழ்ச்சியில் இருந்த மாணவி சுவேதா அடுத்த தேர்வுக்கு தயாராகி வந்தார்.
அப்போது, வீட்டின் மாடியில் இருந்து இறங்கியபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் வலியையும் பொருட்படுத்தாமல் தேர்வுக்கும் தன்னை தயார்ப்படுத்தினார். மருத்துவமனையில் இருந்து காலில் கட்டுடன் பெற்றோர் உதவியுடன் ஆட்டோவில் பள்ளிக்கு வந்து ஆர்வமுடன் தேர்வை எழுதினார். அவர் தேர்வு எழுதுவதற்கு பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறுகின்றனர். கால் எலும்பு முறிவு ஏற்பட்டபோதும் தனது லட்சியத்தை அடைய தீவிர முயற்சி எடுத்துள்ள அந்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.