செய்தியாளர்: கோகுல்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே ஆரம்பாக்கம் ஆதிபராசக்தி கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ரிச்சர்ட் - மீனா தம்பதியர். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், இவர்களது மகன் தோனி (12) ஆத்தனஞ்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சரியாக படிக்காத தோனி, பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளார். இதனால் பெற்றோர் அவரை கண்டித்துவிட்டு, வேலைக்குச் சென்று விட்டனர்.
இதையடுத்து ரேசன் கடைக்கு சென்ற தோனி, பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு மீதி இருந்த காசில், படப்பை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளான். இதைத் தொடர்ந்து வீட்டிற்க வந்த அவன், கழிவறையில் காமாட்சி விளக்கை ஏற்றி வைத்துவிட்டு பெட்ரோலை தன்மீது ஊற்றியுள்ளார். அப்போது, காமாட்சி விளக்கின் நெருப்பு அவர் மீது பட்டு தீப்பிடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி அடித்தபடி கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போர்வையால் அவரை மூடி மீட்டனர். இருப்பினும் 90 சதவீத தீக்காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் தோனி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.