செய்தியாளர்: அ.ஆனந்தன்
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 27ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷாந்தன் மீனவர்கள் 12 பேரும், இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தால் நேரடியாக சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தேதி வரை இலங்கையில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரும், நீதி மன்றக் காவலில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 21 பேர் உட்பட 88 பேர் மீட்கப்படாமல் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.