தமிழ் மொழிக்கு பல்வேறு வகையில் பங்காற்றியவர்கள் வாழ்ந்த திருச்சியில் 11-வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என திருச்சியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
த.மு.எ.க.ச, திருச்சி மாநகர மேம்பாட்டுக் குழு, திருக்குறள் கல்வி மையம், வானம் அமைப்பு, எஸ்.ஐ.ஒ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த அமைப்புகளின் சார்பில் செய்தியாளர்களிடம் த.மு.எ.க.ச மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா பேசினார். அப்போது....
தமிழ்நாட்டின் தொன்மையான நகரங்களில் ஒன்றாக திருச்சி மாவட்டம் இருக்கிறது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வகையில் ஏராளமானோர் பங்காற்றியுள்ளனர். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழிக்காக கீழப்பழுர் சின்னசாமி உயிர் தியாகம் செய்தது, திருச்சியில்தான். அகில இந்திய வானொலியில் தமிழ் பண்பலையை தொடங்க வேண்டும் என திருச்சி வானொலி நிலையம் முன்புதான் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழை ஆட்சி மொழியாக அறிவித்த பின்பு அதை முதலில் நடைமுறைப்படுத்தியது திருச்சி நகராட்சி தான். இப்படி பல்வேறு வகைகளில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர், நடிகர்கள் எம்.ஆர்.ராதா, தியாராஜபாகவதர், சித்தமருத்துவர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் இப்படியாக பலர் தமிழ் மொழிக்காக திருச்சி மாவட்டத்தில் பணியாற்றியுள்ளனர். இது தவிர ரயில், பேருந்து, பன்னாட்டு விமானம் என அனைத்து போக்குவரத்து வசதிகளும் திருச்சியில் உள்ளது.
எனவே உலகத் தமிழ் மாநாட்டிற்கு வர விரும்புபவர்கள் எளிதாக திருச்சிக்கு வந்து செல்ல முடியும். ஆகவே பல்வேறு வகைகளில் சிறப்புகளைக் கொண்ட திருச்சியில் 11வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும். திருச்சியில் மாநாட்டை நடத்தினால் செம்மொழியான தமிழ் மொழியும் வளர்ச்சி பெறும். திருச்சி மாவட்டமும் அதனைச் சார்ந்த பகுதிகளும் வளர்ச்சி அடையும். எனவே 11வது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இது தொடர்பாக முதல்வரையும் சந்திக்க உள்ளோம். திருச்சியில் மாநாடு நடத்த வேண்டும் என பல்வேறு உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும் சந்திப்போம் என்று கவிஞர் நந்தலாலா தெரிவித்தார்.