திருச்சியில் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்ததற்கு விடுதி நிர்வாகத்தின் கொடுமையே காரணம் என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் வடுகர்பேட்டை கிராமத்தில் உள்ள புனித ஜோசப் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அரியலூர் மாவட்டம் அயன்சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் ரேகா (16) 11ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த இவர், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மாலை அதே பகுதியில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக காவல்துறை விசாரித்து வந்தது.
இந்நிலையில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புனித ஜோசப் பெண்கள் பள்ளியின் முன்பு சாலை மறியல் செய்தனர். இதனால் திருச்சி - சிதம்பரம் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், அவர்களை அப்புறப்படுத்த முயன்று, பின்னர் கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாணவியின் தற்கொலை தொடர்பாக பேசிய பெற்றோர், பள்ளி விடுதி நிர்வாகம் தங்கள் மகளை கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டினர். பள்ளி விடுதியில் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும், பாத்திரம் கழுவ வேண்டும், விடுதிகளை கூட்டிப்பெருக்க வேண்டும் ஆகிய வேலைகளை கொடுத்து தங்கள் மகளை துன்புறுத்தியதாகவும் தெரிவித்தனர். இதனால் தான் தங்கள் மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினர்.
மேலும், இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித விசாரணையோ, நடவடிக்கைகள் இல்லை என தெரிவித்தனர்.