தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4-ஆம் தேதி மொழிப்பாடத்துடன் தொடங்கி 25 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 7,534 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.
இந்த தேர்வினை 3,89,736 மாணவர்கள், 4,30,471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தனித் தேர்வர்களாக 5000 பேர் பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுத உள்ளனர். சிறைகளில் இருக்கக்கூடிய சிறைவாசிகள் 187 பேர் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மையங்களில் தேர்வு நடத்தும் பணியில் 46,700 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு முறையாக நடத்தப்படுவதை கண்காணிக்க 3,200 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிலையான கண்காணிப்பு படையினர் 1,134 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வினாத்தாள்கள் 154 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு 875 வழித்தடங்களில் காவல்துறை பாதுகாப்போடு கொண்டு செல்லப்படும்.
பிளஸ் 1 விடைத்தாள்கள் சேகரிப்பு மைதானங்கள் 101 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்படும் விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காக 83 விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.