லிப்ட் அறுந்துவிழுந்ததில் பள்ளி மாணவன் உடல் நசுங்கி பலி - திருமண மண்டபத்தில் சோக நிகழ்வு!
கும்மிடிப்பூண்டியில் திருமண மண்டபத்தில் லிப்ட் ரோப் அறுந்து விழுந்ததில் உணவு பரிமாறும் பணிக்குச்சென்ற காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இது தொடர்பாக மண்டப உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாரின் மகள் ஜெயப்ரியா என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. அதில் நேற்றிரவு ஆந்திராவைச் சேர்ந்த மணமகனுக்கும், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது. அங்கு, கீழ்த்தளத்தில் உணவு சமைத்து லிப்டின் வழியாக முதல் தளத்தில் உள்ள உணவு பரிமாறும் இடத்திற்கு எடுத்துச்செல்வது வழக்கம். அதேபோன்று தான், நேற்றிரவும் நடந்தது. அப்போது, உணவு தயாரிக்கப்பட்டு பெரிய பாத்திரங்கள் மூலம் லிப்ட் வழியாக எடுத்து சென்றபோது, உணவு பரிமாறும் பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். திடீரென லிப்டின் ரோப் அறுந்து விழுந்தது. சற்றும் எதிர்பாராத இந்த விபத்தால் சக ஊழியர்கள் லிப்டில் சிக்கியவர்களை மீட்டனர்.
அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தம்மனூர் பகுதியைச் சேர்ந்த ஷீத்தல்(17) என்ற பதினொன்றாம் வகுப்பு மாணவனின் தலை, லிப்ட் ரோப்பில் சிக்கியதில் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், உணவு பரிமாறும் சக ஊழியர்களான விக்னேஷ் மற்றும் ஜெயராமன் ஆகியோருக்கு கால்களில் முறிவு ஏற்படவே, அவர்களை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்தில் உயிரிழந்த ஷீத்தலின் சடலத்தை கைப்பற்றிய கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்பு, உயிரிழந்த ஷீத்தலின் அண்ணன் தனுஷ்(19) என்பவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்நிலையத்தில் விபத்து தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதில், திருமண மண்டபத்தில் முறையாக அனுமதி வாங்காமல் லிப்ட் பொருத்தி உள்ளதாகவும், அதிக எடை ஏற்றியும், முறையாக பராமரிக்காத காரணத்தாலும் விபத்து நேர்ந்துள்ளதாகவும், லிப்டில் கிரில் மற்றும் கதவுகளின்றி இருந்ததாகவும், அதுவே உயிரிழப்பு ஏற்பட காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக திருமண மண்டபத்தின் உரிமையாளர் ஜெயப்ரியா, மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர், திருமண மண்டபத்தின் உரிமையாளர் ஜெயப்ரியா, மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோர் மீது அஜாக்ரதையாக விபத்து ஏற்பட்டு மரணம் நிகழ்தல் என்ற 304/2 என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோர்ரை கைது செய்துள்ளனர். திருமண மண்டபத்தின் உரிமையாளர் ஜெயப்ரியா இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், அவர் தலைமறைவாகி உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.