செய்தியாளர் - ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், கடந்த 1973 - 74ம் ஆண்டில் 11-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ - மாணவிகள், 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு மாணவ, மாணவிகளாக இருந்த இவர்கள், தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அதில் சிலர் ஓய்வும் பெற்றுள்ளனர்.
சந்திப்பு நடத்த திட்டமிட்டதையடுத்து தைவான், மலேசியா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவர்கள் சீர்காழி வந்து சேர்ந்தனர். “உன்ன பாத்து எத்தன நாள் ஆச்சு நண்பா” என்றபடி, 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட நண்பர்கள், ஆனந்தக் கண்ணீருடன் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.
அப்போது ஒவ்வொருவரும், தங்கள் கணவர், மனைவி, குழந்தைகள், பேரக் குழந்தைகளை அறிமுகப்படுத்திக் கொண்டும், தங்களது நண்பர்களின் குடும்பங்களை தெரிந்து கொண்டும் மகிழ்ந்தனர். குடும்பத்தாரை அறிமுகப்படுத்தியதோடு, ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
தொடர்ந்து, மதிய உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட அவர்கள், பொழுதுபோக்காக சிறு விளையாட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் கலந்து கொண்டு விளையாடினர்.
அதேபோல், தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர் ஆசிரியர்களை வரவழைத்தும் கௌரவித்தனர். படித்த பள்ளியில் ஒன்றிணைந்தோம், நிகழ்வைக் கொண்டாடினோம் என்று இல்லாமல், தாங்கள் படித்த பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்துக் கொடுத்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். 96 பட பாணியில் 74ல் படித்தவர்கள் மீண்டும் சந்திப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.