தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் 11,999 கோயில்களுக்கு தினசரி பூஜையை மேற்கொள்வதற்கு கூட வருமானம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து "தி இந்து" ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள கோயில்களில் வேலை செய்த ஊழியர்களுக்கு அவர்களின் வருமானத்துக்கு அரசு உதவி வழங்கிட வேண்டும் என்று பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத் துறையின் கருத்துகளை நீதிபதிகள் கேட்டறிந்தனர், அதன்படி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன. அதில் 37000 கோயில்களுக்கு வேலைக்கு ஒருவரை மட்டுமே பணியமர்த்தும் வகையில் வருமானம் இருக்கிறது. கூடுதலாக இரண்டு பேரை கூட பணியமர்த்த முடிவதில்லை. அதில் 11,999 கோயில்களில் தினசரி பூஜைகளை மேற்கொள்வதற்கு கூட வருமானம் இருப்பதில்லை என தெரிவித்திருக்கிறது.
மேலும் கோயிலில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் ஆகியோர்களுக்கு மாதச் சம்பளம் அல்லது பக்தர்கள் தரும் தட்டு காணிக்கை கொடுக்கப்படுகிறது. சிலருக்கு தரிசன டிக்கெட்டுகளில் இருந்து பங்கும் செல்கிறது. இது ஒவ்வொரு கோயிலுக்கும் மாறுபடும். ஆனாலும் பொது முடக்க காலத்தில் கோயிலில் வேலை செய்யும் அர்ச்சகர்கள், பூதாரிகள் ஆகிய 13 ஆயிரம் பேருக்கு அரசு தலா ரூ.1000 வழங்கியுள்ளது என அறநிலையத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.