ஓமலூர் அருகே கிணற்றில் குளிக்க சென்ற சிறுவனும், இளைஞரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கருப்பனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (45). கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது 11 வயது இளைய மகன் லோகேஸ்வரன் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். அதேபகுதியில் வசிக்கும் மூதாட்டி ராணி என்பவரின் வீட்டிற்கு, தருமபுரியில் இருந்த அவரது பேரன் நிதிஷ் (18) வருகை தந்திருந்தார். இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுவன் லோகேஸ்வரனும், நிதிஷும் இன்று மதியம் அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். சுமார் 60 அடி ஆழம் உள்ள கிணற்றில், சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளது. கிணற்றில் இறங்கிய சிறுவன் லோகேஸ்வரன் கிணற்று திட்டில் அமர்ந்து குளித்துள்ளார். அப்போது திடீரென நிலை தடுமாறி சிறுவன் கிணற்றின் ஆழமான பகுதியில் விழுந்து தத்தளித்துள்ளார். இதைபார்த்த இளைஞர் நிதிஷ் சிறுவனை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர்.
கிணற்றின் அருகில் யாரும் இல்லாத நிலையில், இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் உப்பி தண்ணீரில் மிதந்த இரு உடல்களையும், அந்தவழியாக சென்ற பார்த்து மக்கள் மீட்டனர். அவர்களின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.