சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக மேலும் 11 அதிகாரிகள் டிபிஜி-யிடம் புகார் அளித்துள்ளனர்.
சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவலர்கள் அளித்த புகார் குறித்து அறிக்கை ஒன்றை நேற்று டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டது. அதில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த 13 பேர் பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப்பதிவு செய்யச்சொல்லி வற்புறுத்துவதாக பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதாக டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்தது.
புகார் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும், டி.ஜி.பி. அலுவலக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது ஒருபுறமிருக்க, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவிற்கு புதிதாக 60 காவலர்கள் தேவை என உள்துறை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் பொன். மாணிக்கவேல். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரின் புகாருக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். காவலர்களை தான் மிரட்டுவதாக வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாக பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று மேலும் 11 சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக டிஜிபி-யிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவன், “பணியின் போது பொன்.மாணிக்கவேல் எங்களை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. இதுவரை விசாரிக்கபட்ட 333 சிலை கடத்தல் வழக்குகளில் எந்தக் குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை. அத்துடன் எந்த சிலைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. 3 மாதத்திற்கு முன்னர் ஒரு சிலையை கண்டுபிடித்தனர். வேறு எதுவும் பிடிக்கப்படவில்லை. நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளை யாரையும் விசாரிக்க விடவில்லை. அவர்கள் கூறும் வழக்கை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஒரு குற்றவாளியை கொடுத்து, அவரை ரிமாண்ட் செய்து என்ன செய்ய வேண்டும் எனக் கூறுவார். மற்றபடி அந்தக் குற்றவாளி யார்? எங்கிருந்து பிடிக்கப்பட்டார்? என எதையும் கூறமாட்டார். உண்மையான குற்றவாளிகளை அவர் பிடிக்கவில்லை” என்று தெரிவித்தார்.