அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது இளையமகன் சந்தோஷ், 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்த சந்தோஷ், திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் பதற்றமான மணிகண்டன் தனது மகன் சந்தோஷை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். மகன் கிடைக்காத நிலையில், இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில் கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த விருத்தகிரி என்பவர் ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் புதுத்தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் பின்புறம் செப்டிக் டேங்க் தொட்டி கட்டப்பட்டிருந்தது. வீட்டில் வேலை செய்த தொழிலாளர்கள், செப்டிக் டேங்க் அருகே சென்றபோது, அதில் தேங்கியிருந்த மழை நீரில் சிறுவனொருவன் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திலும், புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செப்டிக் டேங்க்கில் இருந்த நீரில் உயிரிழந்த நிலையில் மிதந்த சிறுவனை மீட்டனர். தொடர் விசாரணையில், திங்கட்கிழமை அன்று காணாமல் போன சிறுவன் சந்தோஷ் என்பது தெரியவந்தது. இது குறித்து சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுவன் அவ்வழியாக செல்லும் போது இருட்டில் வழி தெரியாமல் செப்டிக் டேங்கில் விழுந்து இறந்தாரா அல்லது வேறு யாரேனும் சிறுவனை கொலை செய்து செப்டிக் டேங்க் தொட்டியில் போட்டார்களா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.