படிப்பில் ஆர்வம் காட்டாமல், விளையாட்டில் ஆர்வம் காட்டுவதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் உறங்கான்பட்டி அருகே உள்ள சூரத்துப்பட்டியைச் சேர்ந்த ரவிசந்திரன் மற்றும் அழகு தம்பதிகளுக்கு சுதா என்ற மகளும், ராஜ்குமார் என்ற மகனும் உள்ளனர். அத்துடன் மூன்றாவதாக காயத்ரி என்ற மகளும் இருந்தார். காயத்ரி வீட்டின் அருகே உள்ள உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். இவருக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் காரணமாக, பள்ளிகளில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு பல்வேறு பரிசுகளும், பதக்கங்களும் பெற்றுள்ளார்.
இதனால் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பள்ளியின் ஆசிரியர்கள் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த அறிவுருத்தியுள்ளனர். பெற்றோரும் காயத்ரியை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த மாணவி, தனது விளையாட்டின் ஆர்வம் பாதிக்கப்பட்டு விடுமோ என அஞ்சியுள்ளார். நேற்று காலை பள்ளிக்கு புறப்படும் போது, வீட்டில் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை அருந்தி விட்டு புறப்பட்டுள்ளார். இந்த விபரீத முடிவால் பள்ளி அருகே வரும் போது, மாணவி காயத்ரி மயங்கி விழுந்தார்.
அருகே இருந்தவர்கள் மாணவியை உடனடியாக வெள்ளலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி காயத்ரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விளையாட்டுத்துறையில் சாதனை புரிய வேண்டும் என ஆர்வத்துடன் இருந்த மாணவி, தனது விளையாட்டு தடைபட்டுவிடுமோ என அஞ்சி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.