கடந்த 1913ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்த பாம்பன் தூக்கு பாலம் வழியாக 200டன் எடையுள்ள கப்பல்கள், சிறிய ரக போர் கப்பல்கள் சென்று வந்தன. 109 ஆண்டுகள் கடந்த இந்த பாம்பன் ரயில் பாலத்தில், கடந்த 11 மாதங்களாக பழுது காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் உள்ளூர் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதற்கிடையே பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் முடியும் வரை தூக்கு பாலம் திறக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்ததன் அடிப்படையில், பாம்பன் பழைய தூக்கு பாலம் திறப்பது இன்றே கடைசி என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரலாற்றுச் சின்னமாக விளங்கும் பாம்பன் ரயில் பாலத்தை புராதன சின்னமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, நாகை மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள், பாம்பன் தூக்குபாலம் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து கேரள மாநிலத்திற்கு கடந்து சென்றதை பாம்பன் சாலை பாலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.