108 திவ்ய தேச கோவில் தரிசனம்: 7 ஆண்டுகளாக சைக்கிளில் சுற்றிவரும் தம்பதியர்

108 திவ்ய தேச கோவில் தரிசனம்: 7 ஆண்டுகளாக சைக்கிளில் சுற்றிவரும் தம்பதியர்
108 திவ்ய தேச கோவில் தரிசனம்: 7 ஆண்டுகளாக சைக்கிளில் சுற்றிவரும் தம்பதியர்
Published on

இந்தியா முழுவதும் உள்ள 108 திவ்ய தேச கோவில்களுக்கு 7 ஆண்டுகளாக சைக்கிளில் செல்லும் தம்பதியர் தரிசனம் செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி அருகே அகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (48). இவரது மனைவி கோதை (44) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், விவசாயியான இவர், தனது மனைவி கோதையுடன் கடந்த 7 வருடத்திற்கு மேலாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 திவ்ய தேச கோவில்களுக்கு சைக்கிளில் பயணம் செய்து தரிசனம் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த அவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி கோவில் வாசல் பகுதியில் நின்று ராமநாதசாமியை தரிசனம் செய்து மீண்டும் ராமேசுவரத்தில் இருந்து சைக்கிளில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுபற்றி முருகன் கூறும் போது, “சிறுவயதில் இருந்தே எனக்கு தெளிவாக பேச்சு வராது. நன்றாக பேச வேண்டும் என கடவுளிடம் பல ஆண்டுகளாக தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தேன். பிரார்த்தனை நிறைவேறியதால் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக அனைத்து கோவில்களுக்கும் செல்ல முடிவு செய்தேன்.

பண வசதி இல்லாததால் மனைவியுடன் சைக்கிளில் பயணம் செய்து வருகிறேன். 7 வருடங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு முதலாவதாக திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தேன். அதன் பின்னர் திருப்பதி, அயோத்தி, காசி, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தேன்.

தற்போது ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்துள்ளேன். அடுத்ததாக திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறேன். அங்கிருந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, சங்கரன்கோவில், மதுரை உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்ய உள்ளேன்” என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com